மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற வராததற்கு எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமல்ல, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னதாக, பிரதமர் இருக்கை அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தகாத முறையில் நடந்துகொள்ளக்கூடும் என்ற தகவலால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் எனத் தான் கேட்டுக்கொண்டதாக சபாநாயகர் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்பிக்கள், சபாநாயகர் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் மீதான இந்த அவதூறு குற்றச்சாட்டு தங்களின் கண்ணியத்தை பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், சபாநாயகர் நடுநிலையோடும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்கச் சென்றபோது, அரசு தரப்பு பதிலுக்காக காத்திருப்பதாக சபாநாயகர் கூறியது அவரது அதிகாரத்தையே கேள்விக்குறியாக்குவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரைக் காப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
