அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது கவனத்தை உள்நாட்டுத் தேர்தல் சீர்திருத்தங்கள் பக்கம் திருப்பியுள்ளார். கடந்த தேர்தல்களில் மோசடிகள் நடந்ததாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அவர், அமெரிக்க தேர்தல் முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அமெரிக்கத் தேர்தல்கள் உலக அரங்கில் கேலிப்பொருளாக மாறியுள்ளன; முறைகேடுகளைத் தடுக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வாக்காளர்கள் அனைவரும் அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆதாரத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அஞ்சல் வழி வாக்குப்பதிவு முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் ராணுவத்தினர் தவிர மற்ற அனைவரும் நேரடியாகவே வாக்களிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடித் திட்டங்களுக்கு ஆதரவாகப் போராடுமாறு குடியரசுக் கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
