கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மருமகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை போலீஸார் கைது செய்தனர். அதாவது தலக்குளம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் (34), தச்சராக வேலை பார்த்து வருகிறார். இவரும் சுபிதா (28) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அனீஸ் (30) என்பவருடன் சுபிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் கண்டித்தும் சுபிதா தனது பழக்கத்தைக் கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சுபிதா தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியபடி, நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். குழந்தைகள் கணவருடன் இருக்கும் நேரத்தில் அனீஸை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பது மற்றும் நீண்ட நேரம் செல்போனில் பேசுவது என சுபிதா தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்துள்ளார்.
சுபிதாவின் இந்தச் செயலை அவரது சித்தப்பா ராஜேஷ் (45) கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுபிதா, மாற்றுத்திறனாளியான ராஜேஷை கீழே தள்ளித் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுபிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இ போலீஸார், சுபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
