கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகம் தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களிடமே போதைப்பொருள் புழக்கம் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அது அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் தாங்கள் தனித்து போட்டியிட்டது திமுகவிற்குச் சாதகமாக அமைந்ததாகவும், ஆனால் இந்த முறை வலுவான கூட்டணியுடன் களம் இறங்குவதால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ‘அம்மாவின் ஆட்சி’ அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் உண்மையான ஒற்றுமை இல்லை என்றும், கொள்கை ரீதியான கூட்டணி என்று சொல்வதெல்லாம் வெறும் வெளிவேஷம் என்றும் அவர் விமர்சித்தார்.

சில கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களைத் தேடி மற்ற கட்சிகளிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பேரம் பேசி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.