உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர்களது தந்தை சேத்தன் குமாரின் கடந்த கால மர்ம மரண வழக்கு ஒன்றைத் தற்போது காவல்துறை கையில் எடுத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையிலிருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சேத்தன் குமாரின் காதலி (Live-in partner) என்பது விசாரணையில் தெரியவந்தது. அப்போது அது தற்கொலை என வழக்குப் பதியப்பட்டு முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவரது மூன்று மகள்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்துள்ளதால், தந்தையின் மனநிலை மற்றும் குடும்பச் சூழலை ஆராய அந்தப் பழைய வழக்கையும் மீண்டும் தூசு தட்டப்போவதாகத் துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் சேத்தன் குமாரின் குடும்ப அமைப்பு அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் சுஜாதா, ஹீனா, டீனா ஆகிய மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்து, அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களில் உயிரிழந்த நிஷிகா (16) சுஜாதாவின் மகள். பிராச்சி (14) மற்றும் பாக்கி (12) ஆகிய இருவரும் ஹீனாவின் மகள்கள். டீனாவுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பங்குச்சந்தை தரகரான சேத்தன் குமார், சுமார் ரூ. 2 கோடி வரை கடனில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மின்கட்டணம் செலுத்துவதற்காகத் தனது மகள்களின் செல்போன்களைக் கூட அவர் விற்றுள்ளார். பண நெருக்கடி மற்றும் படிப்பில் ஆர்வம் இல்லாததால், இந்தச் சிறுமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்து 8 பக்க டைரி ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அதில் தங்களுக்குக் கொரிய கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு மீது இருந்த அதீத ஈடுபாட்டை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்குக் கொரியப் பெயர்களைச் சூட்டிக்கொண்ட அவர்கள், ஆன்லைன் வாயிலாகக் கொரிய விளையாட்டு ஒன்றில் (Task-based game) ஈடுபட்டு வந்திருக்கலாம் என்றும், அதன் இறுதிக்கட்டமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் கடந்த புதன்கிழமை அதிகாலை 2:15 மணியளவில், செல்போன்களைப் பறித்ததற்காகப் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில், 9-வது மாடியிலிருந்து அடுத்தடுத்து குதித்து இந்தச் சிறுமிகள் உயிரை மாய்த்துக்கொண்டனர். தந்தை மீதான சந்தேகங்கள் மற்றும் சிறுமிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
