டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அசோக் விஹார் பகுதியில் உள்ள ‘சுவாபிமான்’ அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து குதித்து 19 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது.

மேலும் உயிரிழந்த வாலிபர் ஆசாத்பூர் லால்பாக் பகுதியைச் சேர்ந்த அனுராக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய தந்தை டெல்லி ஹோம் கார்டில் காவலராகப் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த காவலாளி, பதறியடித்துக் கொண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் விஹார் போலீசார், பலத்த காயமடைந்த அனுராக்கை மீட்டு அருகில் உள்ள தீப் சந்த் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அனுராக் இந்த விபரீத முடிவை எடுப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு குறுகிய வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில், சோகமான முகத்துடன் “என்னை மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த கணமே 14-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? காதல் தோல்வியா, குடும்பப் பிரச்சினையா அல்லது ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கமா என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.