“வெளியில எல்லாரும் என்னை அங்கிள் ஜினுதான் சார் கூப்பிடுவாங்க, ஆனா இந்த நாலு செவுத்துக்குள்ள என்னை எல்லாரும் ‘மகாராஜ்’னுதான் கூப்பிடணும், இல்லைன்னா நடக்குறதே வேறப்பா!” என்று கைது செய்யப்பட்டுள்ள போலி சாமியார் ராதா மோகன் மிஸ்ரா பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி வந்த அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி ஒட்டுமொத்த மகாராஷ்டிர மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

பெருநிறுவனத் (Corporate) துறையைச் சேர்ந்த உயர் கல்வி கற்ற பெண் ஒருவரை, கடந்த 17 ஆண்டுகளாகத் தனது மூடநம்பிக்கை வலையில் சிக்க வைத்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வந்த இந்த போலி பாபாவின் அசல் முகத்தைக் காவல்துறையினர் தற்பொழுது தோலுரித்துக் காட்டியுள்ளனர்.

இவனுக்குச் சொந்தமான 12,000 சதுர அடி சொகுசு பங்களாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அங்கு ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சூழலில், ஒரு ரகசிய அறையில் இருந்து அதிக அளவில் போதை மற்றும் சந்தேகத்திற்கிடமான மருந்துகளைப் போலீஸார் கைப்பற்றி உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, அவளது தனிப்பட்ட நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து சர்வாதிகாரம் செலுத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண் தைரியமாக அந்த ரகசியக் கேமராக்களை அடியோடு உடைத்தெறிந்துவிட்டு காவல்துறையிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸார், முக்கியக் குற்றவாளியான ராதா மோகன் மிஸ்ரா, அவனுக்குப் பெண்களை மூளைச்சலவை செய்து இழுத்து வரும் துணையாக இருந்த 5 பெண் தரகர்கள் உள்ளிட்ட மொத்தம் 8 பேரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

இவர்களது பின்னணியில் இருக்கும் பல கோடி ரூபாய் நிதி மோசடிகள் குறித்தும், இவர்களது விசித்திர வலையில் இன்னும் எத்தனை உயர் பதவியில் இருக்கும் பெண்கள் சிக்கியுள்ளனர் என்பது குறித்தும் தனிப்படை போலீஸார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.