உத்தரகாண்ட் மாநிலம் பன்பசா பகுதியில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ் ஜவான் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பிரிவான எஸ்.ஓ.ஜி-யில் (Special Operation Group) பணியாற்றி வந்த 38 வயதான கிரீஷ் பட் என்ற அந்த ஜவான், வெள்ளிக்கிழமை மதிய வேளையில் எப்போதுபோல உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்மிற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் சாதாரணமாக ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அசௌகரியமாக உணர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே மயங்கி தரையில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிம்மில் இருந்த மற்ற நபர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
@AjitSinghRathi बनबसा में शुक्रवार को जिम में व्यायाम कर रहे उत्तराखंड पुलिस के SOG जवान गिरीश भट्ट की अचानक तबीयत बिगड़ने से मौत हो गई। अस्पताल पहुंचने पर चिकित्सकों ने उन्हें मृत घोषित कर दिया। प्रारंभिक तौर पर हृदय गति रुकने को मौत का कारण माना जा रहा है। pic.twitter.com/fOcHpst9Dx
— RK VERMA (@RKVERMA11641781) June 20, 2026
கிரீஷ் பட்டின் இந்தத் திடீர் மரணத்திற்கு ‘கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் மாரடைப்புதான் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டமாகச் சொல்லப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விபரம் தெரியவரும் என போலீஸார் கூறியுள்ளனர்.
சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது விளையாடும் போதோ இளைஞர்கள் இப்படித் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜவானின் கடைசி மூச்சு அடங்கும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் முழு காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி ஒட்டுமொத்த போலீஸ் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
