கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், மரம் ஒன்றில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து அங்கிருந்த குழந்தைகளைத் தாக்கத் தொடங்கின. சுமார் 25-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அங்கன்வாடி உதவியாளர் ஹாலம்மா, ஒரு நொடியும் தாமதிக்காமல் செயல்பட்டார்.

மேலும் குழந்தைகளைத் தேனீக்களிடம் இருந்து காப்பாற்ற அவர்களை ஒவ்வொன்றாகப் பாதுகாப்பான இடத்திற்கு அள்ளிச் சென்றார். அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் ஹாலம்மாவை மிகக் கொடூரமாகக் கொட்டின. தன்னைப் பற்றி கவலைப்படாமல் குழந்தைகளைக் காப்பதே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட ஹாலம்மா, இறுதியில் தேனீக்களின் விஷம் உடலில் ஏறியதால் மயங்கி விழுந்தார்.

இந்நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது உயிரைப் பணையம் வைத்து 25 குழந்தைகளின் எதிர்காலத்தைக் காத்த ஹாலம்மாவின் இந்தச் செயல், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாயின் உள்ளத்தோடு அவர் செய்த இந்த ஈடு இணையற்ற தியாகம், வரலாற்றில் ஒரு வீரக் கதையாக நிலைத்து நிற்கும்.