நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசினார்.

தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கை வரும் 11-ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 12 முதல் 14-ஆம் தேதிக்குள் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், புதிய தமிழகம் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாகவும், வரும் காற்றின் தன்மையைப் பொறுத்துக் கதவை மூடுவதோ அல்லது திறந்து வைப்பதோ அமையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், புதிய தமிழகம் கட்சி தனித் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்ற பிம்பத்தை இந்த முறை உடைக்கப் போவதாகத் தெரிவித்த கிருஷ்ணசாமி, பொதுத் தொகுதிகளான நெல்லை அல்லது நாங்குநேரி ஆகிய இரண்டில் ஒன்றை இம்முறை கேட்டுப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.