தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விருதுநகரில் இன்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் மாநாடு நடத்தினாலே திமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2004 மற்றும் 2019 தேர்தல்களில் இங்கிருந்து தொடங்கிய பயணமே பெரிய வெற்றிகளைத் தேடித்தந்ததை நினைவு கூர்ந்தார்.

நம்பிக்கையோடு இருக்கும் இளைஞரணியினரைப் பார்க்கும்போது தமக்கு கூடுதல் உற்சாகம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

ஹிந்தி திணிப்பு போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தமிழை திமுக எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளித்த அவர், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், அவர் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். தனக்கு பதவி கொடுத்தவர்களையே கட்சியை விட்டு நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி என்றும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றும் அவர் கணித்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ளதால் கட்சியினர் மெத்தனமாக இருக்காமல் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.