திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சமையல் மாஸ்டர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி இந்திரா மற்றும் அவரது உறவினர் சந்திரசேகர் ஆகிய இருவரை ஆலிவலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் கீழாந்தி வடிகால் வாய்க்கால் அருகே சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் பவானியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுப்பிரமணியன் கடைசியாகத் தனது உறவினரான சந்திரசேகருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சந்திரசேகரைப் பிடித்து விசாரித்ததில், இந்தத் திட்டமிட்ட படுகொலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுப்பிரமணியனின் மனைவி இந்திராவிற்கும் சந்திரசேகருக்கும் இடையே இருந்த ரகசிய உறவைச் சுப்பிரமணியன் கண்டித்ததால், அவரைக் கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று சந்திரசேகர் திட்டமிட்டபடி சுப்பிரமணியனை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் போதையில் இருந்த சுப்பிரமணியனைத் தலையில் கல்லால் அடித்துக் கொன்று வாய்க்காலில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி இந்திரா மற்றும் கொலையைச் செய்த சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களைத் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
