கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுஹைல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர்களைச் சந்திக்க வந்த சுஹைல், அங்குள்ள சிறுமியுடன் பழகி, அவர் வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பந்திரங்காவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரைத் தொடர்ந்து தலைமறைவான சுஹைல், தனது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கேரளாவிலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதால் அவரைப் பிடிப்பதில் போலீசாருக்குச் சவால்கள் நீடித்தன.

இருப்பினும், தொழில்நுட்ப உதவியுடனும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் கேரளா மற்றும் மகாராஷ்டிரா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், அங்குள்ள ஒரு குடிசைப் பகுதியில் தங்கியிருந்த சுஹைல் கைது செய்யப்பட்டு கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டார்.