தலைநகர் டெல்லியில் 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் மாயமாவதாக வெளியான இந்தத் தரவுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கிய நிலையில், இது குறித்து டெல்லி காவல்துறை தற்போது விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், குறிப்பாக சிறுமிகள் மாயமாவது குறித்த செய்திகள் பண ஆதாயத்திற்காக மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள காவல்துறை, கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது காணாமல் போவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவே குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஜனவரியில் 1,684 பேரும், 2025-ல் 1,786 பேரும் மாயமான நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் அந்த எண்ணிக்கை 1,777 ஆக உள்ளது. பள்ளி முடிந்து வரத் தாமதமாவது அல்லது தற்காலிகமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிக்கின்றனர் என்றும், அவ்வாறு மாயமானவர்களில் பலர் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.