தமிழக அரசியலில் தற்போது 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று டிஜிட்டல் எரிமலையாக வெடித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே மற்றும் குமார் விஸ்வாஸ் ஆகியோருடன் வெள்ளை நிறச் சட்டையில் நடிகர் விஜய் நிற்கும் அந்த வீடியோ, தற்போது வெறும் நினைவலைகளாக மட்டுமல்லாமல், 2026 தேர்தலுக்கான ஒரு திட்டமிட்ட ‘பிம்ப அரசியல்’ (Perception Battle) கருவியாக மாறியுள்ளது.

கடந்த 2011 ஆகஸ்ட் மாதம், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான ‘லோக் பால்’ இயக்கம் தீயாய் பரவிக்கொண்டிருந்தது. அப்போது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் டெல்லி ராம்லீலா மைதானத்திற்குச் சென்றார். அண்ணா ஹசாரேவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அவர், ஊழலுக்கு எதிராகத் தனது குரலை உயர்த்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by TVK IT Wing (@voiceof_tvk)

“நான் இங்கே ஒரு ரசிகனாகவும், இந்தியக் குடிமகனாகவும் வந்துள்ளேன்” என அன்று விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கும் அவரது ஆதரவாளர்கள், ஊழலுக்கு எதிரான விஜய்யின் நிலைப்பாடு என்பது ‘தேர்தல் நேரத்து அரசியல் தந்திரம்’ அல்ல, அது 15 ஆண்டுகால கொள்கை என்பதை நிரூபிக்க முயன்று வருகின்றனர்.

அண்ணா ஹசாரே இயக்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2009-இல் விஜய் டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய் காங்கிரஸில் இணைந்து ‘இளையர் காங்கிரஸ்’ முகமாக மாறுவார் எனப் பலமாகப் பேசப்பட்டது. ஆனால், அவர் அரசியலில் நுழையவில்லை.

இருப்பினும், ராகுல் காந்தியுடன் விஜய்க்கு இருந்த நட்பு இன்றும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. கரூர் விபத்தின்போது விஜய் ராகுலுக்கு ஆறுதல் கூறியதும், விஜய்யின் படங்களுக்குப் பிரச்சினை வந்தபோது ராகுல் குரல் கொடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு ‘மறைமுகக் கூட்டணிக்கு’ வழிவகுக்கலாம் என்றும், அது திமுக-வுக்குத் தலைவலியாக அமையக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசியல் எப்போதும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே நகர்ந்துள்ளது. இந்த சூழலில், அண்ணா ஹசாரேவுடன் தன்னைத் தொடர்புபடுத்துவதன் மூலம் விஜய் சில முக்கியச் செய்திகளை மக்களுக்குச் சொல்ல முற்படுகிறார்: அதாவது பாரம்பரியக் கட்சிகளுக்குப் பதில், ஊழலுக்கு எதிராக ‘ஜீரோ டாலரன்ஸ்’ (Zero Tolerance) கொண்ட ஒரு தூய்மையான மாற்றாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.

தான் திடீரென வானத்திலிருந்து குதித்த ‘பாரசூட்’ தலைவர் அல்ல; 15 ஆண்டுகாலமாக அரசியலைக் கவனித்து, பக்குவப்பட்டு வந்த ஒரு போராளி என்ற பிம்பத்தை உருவாக்குகிறார். அண்ணா ஹசாரே இயக்கம் அன்று லட்சக்கணக்கான இளைஞர்களைத் தட்டி எழுப்பியது. அதே உணர்வை தற்போது தமிழக இளைஞர்களிடம் விதைக்க விஜய் ஆதரவாளர்கள் முயல்கின்றனர்.

மேலும் அண்ணா ஹசாரே அவருக்கு ‘நேர்மை’ எனும் கவசத்தைத் தருகிறார் என்றால், ராகுல் காந்தியுடனான நெருக்கம் அவருக்குத் தேசிய அளவிலான ஒரு பாதுகாப்பைத் தருகிறது. மொத்தத்தில், சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்தப் பழைய வீடியோ, 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான விஜய்யின் அரசியல் அடித்தளத்தின் ‘அடிக்கல்லாக’  பார்க்கப்படுகிறது.