ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி என்ற 23 வயது பெண், தனது கணவர் ஆஷிஷை தனது காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு நடைப்பயணம் சென்றபோது, மறைந்திருந்த சஞ்சுவின் கும்பல் ஆஷிஷை வழிமறித்துத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றது. இந்தச் சம்பவத்தை விபத்து போலச் சித்தரிக்க முயன்ற அஞ்சலி, தனது நகைகள் திருடு போய்விட்டதாகவும் தானும் மயங்கி விழுந்ததாகவும் நாடகமாடினார்.
ஆனால் ஆஷிஷின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அஞ்சலியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்தக் கொலைக் கும்பல் பிடிபட்டது. 3 மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்த இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகலை பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஆஷிஷை விட, கல்வியறிவு மற்றும் வருமானம் குறைந்த ஒருவருக்காக அஞ்சலி இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பது இரு குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சலியின் சொந்தக் குடும்பத்தினரே இச்செயலால் அவமானமடைந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அஞ்சலி, அவரது காதலன் சஞ்சு மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் ரோகித் மற்றும் பாதல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
