ரயிலில் RAC (Reservation Against Cancellation) டிக்கெட் எடுத்து, ஒரு பெர்த்தில் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்குப் பாதி கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. “ரயிலில் படுக்க வசதி (Full Berth) கிடைக்காமல், மற்றொருவருடன் இருக்கையைப் பகிர்ந்து கொண்டு சிரமப்பட்டுப் பயணம் செய்யும் ஒரு பயணிகளிடம் இருந்து, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இணையான முழு கட்டணத்தை வசூலிப்பது நியாயமற்றது” என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பிப்ரவரி 4, 2026 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதற்கென ஒரு புதிய ரீஃபண்ட் முறையை இந்திய ரயில்வே உடனடியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் ஏறிய பிறகு அவர்களுக்கு முழு பெர்த் கிடைக்காவிட்டாலும், அவர்கள் செலுத்திய முழு தொகையும் ரயில்வேக்கே சென்றுவிடுகிறது. இது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், “சேவைக்குத் தகுந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்” என்கிற ரீதியில் இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது.

இது மட்டுமின்றி, குறைந்த வேகத்தில் செல்லும் ரயில்களை ‘சூப்பர்ஃபாஸ்ட்’ (Superfast) என்று வகைப்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதையும் அந்தக் குழு கடுமையாகச் சாடியுள்ளது. இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் சாமானிய மக்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.