சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லுமாறு கூறி வந்துள்ளார்.
நிக்கில் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததால், கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நிக்கில், இன்று காலை தாய் மீண்டும் வேலைக்குச் செல்லச் சொன்னபோது, வீட்டில் இருந்த கத்தியால் அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டு, எதுவும் நடக்காதது போல் படுக்கையறையில் உறங்கியுள்ளார்.
நிக்கில் நீண்ட நேரமாகத் தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது நண்பர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை. உடனடியாக அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆக்ஸிலியாவின் உடலை மீட்டு, அங்கேயே தூங்கிக்கொண்டிருந்த நிக்கிலை கைது செய்தனர். விசாரணையில், வேலைக்குச் செல்லும்படி தாய் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்ததாக நிக்கில் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
