உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள பெரியா நக்லா கிராமத்தில், 19 வயதே ஆன சிம்ரன் என்ற இளம் பெண் திருமணமான 11 மாதங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ராஜா என்பவருடன் சிம்ரனுக்கு திருமணம் நடந்த நிலையில், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கையில் சில காலத்திலேயே வரதட்சணை கொடுமையும், குடும்பத் தகராறும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தனது தந்தை வீட்டிற்குச் சென்றிருந்த சிம்ரன், அங்கிருந்து கணவர் வீட்டிற்குத் திரும்பிய மறுநாளே இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று தனது பெற்றோருக்கு போன் செய்த சிம்ரன், கணவர் வீட்டில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், உணவுகூட வழங்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

அந்த போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நேரத்திலேயே அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் உறவினர்களுக்குக் கிடைத்துள்ளது. இது குறித்து சிம்ரனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை மற்றும் சித்திரவதை செய்ததாகக் கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது சிம்ரனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.