காங்கிரஸ் கட்சி வரலாற்றுப் பிழையை இழைத்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் கட்சியினர் சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொந்தக் கட்சிக்குள் அடிதடியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸார், தற்போது நாட்டின் பிரதமரையே குறிவைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், தோல்வி பயத்தால் காங்கிரஸ் ஒரு சமூக விரோத அமைப்பாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மக்களால் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிராக இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் உடனடியாகப் பதவி விலகி, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவறும் பட்சத்தில், தமிழக பா.ஜ.க. சார்பில் அக்கட்சிக்கு எதிராகப் பெரும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.