நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் மோடி வராதது குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வந்த நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு அதிரடியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். பிரதமர் மோடியைப் பாராளுமன்றத்திற்கு வரவேண்டாம் என்று தான்தான் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சீன ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லப் பயந்துதான் பிரதமர் அவைக்கும் வரவில்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், ஓம் பிர்லாவின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு பெரிய ‘சதி’ செய்திருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் சில முக்கிய காரணங்களால் அவரைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் “பிரதமர் ஓடி ஒளிவதாக” விமர்சித்ததற்கு, இது சபாநாயகரின் நேரடி பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. சபாநாயகரே முன்வந்து இப்படி ஒரு காரணத்தைச் சொன்னது இதுவே முதல்முறை என்பதால், டெல்லி அரசியல் களம் இப்போதைக்கு அடங்காது போலிருக்கிறது
