திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் சமூக வலைதளம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகியது தெரியவந்தது.
சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவரைத் தனது ஊருக்கு அழைத்துச் சென்ற அந்த வாலிபர், சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்த தாமோதரனைப் பிடித்து புத்தாநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கடத்தப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்ட போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சமூக வலைதளங்கள் மூலம் சிறுமிகளை ஏமாற்றித் திருமணம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
