உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து இரண்டு இளம்பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் மற்றும் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் தோழிகளாக இருந்து, பின்னர் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழத் தொடங்கிய இவர்களைக் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் செல்போன் சிக்னல் மூலம் இவர்களைக் கண்டுபிடித்தனர்.
காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளம்பெண்கள், தாங்கள் இருவரும் மேஜர் (Adults) என்றும், ஒருவரையொருவர் விரும்பித் திருமணம் செய்துகொண்டதாகவும் உறுதியாகத் தெரிவித்தனர். பெற்றோரிடமிருந்து தங்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரியதையடுத்து, அவர்கள் இருவரும் தற்காலிகமாக அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த காவல் கண்காணிப்பாளர், பெண்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
