அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எப்போதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும், தங்கள் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்பதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறினார்.
மேலும், நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசி வருவதாகச் சாடிய அவர், தைரியம் இருந்தால் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளிக்கட்டும் என சவால் விடுத்தார்.
தங்கள் கட்சியை ஊழல் கட்சி என்று விஜய் குறிப்பிடவில்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை முன்னுதாரணமாகக் கொண்டாடும் விஜய், நிச்சயம் அதிமுகவை விமர்சித்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
தன் மீதான ஊழல் புகார்கள் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் கூட்டணி மீது முதல்வர் ஸ்டாலினால் கூட எந்தக் குறையும் சொல்ல முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
