நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு அவரை இதுவரை விமர்சிக்காமல் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இனிமேல் விஜய் உடன் நேரடி மோதல் இருக்கும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு ஓட்டை இன்ஜின் என மிகக் கடுமையாகச் சாடினார்.

மேலும், கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகள் மற்றும் அடிக்கடி கட்சி மாறியவர்களுக்கெல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாகத் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகியும் தற்போதைய அதிமுக நிர்வாகியுமான சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலை நாள்தோறும் ஒரு கருத்தைப் பேசும் இயல்புடையவர் என விமர்சித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து இதுவரை அமைதி காத்து வந்த அண்ணாமலை, தற்போது முதன்முறையாக நேரடியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் இந்த அதிரடி மாற்றத்தால் வரும் காலங்களில் பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே அரசியல் மோதல் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.