உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்போன் விளையாட்டுக்கு அடிமையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.

இவர்கள் மூவரும் நீண்டகாலமாக கொரியன் வீடியோ கேம் ஒன்றுக்குத் தீவிரமாக அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த சிறுமிகளை, அவர்களது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும், அந்த விளையாட்டை விளையாடக் கூடாது எனத் தடை விதித்ததோடு, செல்போன்களையும் பறித்துள்ளனர்.

பெற்றோரின் தடையால் மனமுடைந்த சிறுமிகள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று சிறுமிகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு முன்பாக அந்தச் சிறுமிகள் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: “அப்பா, எங்களை மன்னித்து விடுங்கள். எங்களால் அந்த கொரியன் விளையாட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. கொரியாதான் எங்களின் வாழ்க்கை. அது இல்லாமல் எங்களால் வாழ முடியாது. அதனால் எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம்.”

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சிறுமிகளின் தற்கொலைக்கு அந்த வீடியோ கேம் எவ்வாறு தூண்டுதலாக இருந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.