பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பதும், ‘பிளையிங் கிஸ்’ (Flying Kiss) கொடுப்பதும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும் என்று சண்டிகர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2021-ஆம் ஆண்டு, அசோக் குமார் (62) என்ற முதியவர், பெண் ஒருவரைப் பார்த்துக் கண்ணடித்ததுடன், அவருக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்து அநாகரீகமான சைகைகளைச் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிமன்ற நீதிபதி சச்சின் யாதவ் தனது தீர்ப்பில் கூறியதாவது: ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுப்பதும், கண்ணடிப்பதும் அந்தப் பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் செயலாகும். இது ஒரு வகையான பாலியல் தொல்லையே. இத்தகைய செயல்கள் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்றார்.
விசாரணையின் முடிவில் அசோக் குமார் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், அவரது வயது மற்றும் பிற சூழல்களைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாகச் சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர் 6 மாத கால நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த 6 மாத காலத்தில் அவர் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவருக்கு உரிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் எச்சரித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான சிறு சிறு அத்துமீறல்களையும் சட்டத்தின் முன் குற்றமாக உறுதி செய்துள்ள இந்தத் தீர்ப்பு, சட்ட வல்லுநர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
