மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக வழக்கறிஞராக நேரடியாக ஆஜராகி வாதாடிய சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் (ECI) மம்தா அரசுக்கும் இடையே மூண்டுள்ள மோதலே இதற்கு முக்கியக் காரணம். சாதாரணமாக இரண்டு ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் இந்த முக்கியமான பணிகளை, வெறும் இரண்டு மாதங்களுக்குள் அவசர அவசரமாக முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்துவதன் பின்னணியில் ஏதோ ஒரு “மறைமுகத் திட்டம்” இருப்பதாக மம்தா பானர்ஜி நீதிபதிகளிடம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்தில் வாதாடிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் இந்தத் திடீர் அவசரத்தால் வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக வாதிட்டார். முறையான கால அவகாசம் இல்லாமல் பணிகளை முடிக்கச் சொன்னதால், உண்மையான வாக்காளர்கள் விடுபடவும், தவறான பதிவுகள் நுழையவும் வாய்ப்புள்ளதாக அவர் தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார். மாநில அரசைத் திட்டமிட்டு அவசரப்படுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் அவர் உச்ச நீதிமன்றத்தில் கிளப்பியுள்ளது, அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.