காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் பகுதியில், கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (36) என்பவரின் மனைவி புஷ்பா (34). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புஷ்பா வீட்டில் தனது கைப்பேசிக்கு (மொபைல் போன்) சார்ஜ் போட முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கரமான முறையில் மின்சாரம் பாய்ந்ததில், புஷ்பா சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு புஷ்பாவை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
