உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகை கொள்ளை வழக்கை போலீசார் அதிரடியாகத் துப்புதுலக்கியுள்ளனர்.
ஜனவரி 23-ஆம் தேதி இரவு, டெல்லி சாலையில் உள்ள ‘கேரட்லேன்’ ஷோரூமின் சுவரைத் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளைத் திருடிச் சென்றனர். சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க முகமூடி அணிந்ததோடு, போலீசாரை திசைதிருப்ப கொள்ளையடித்த பிறகு காலில் அடிபட்டது போல நொண்டி நொண்டி நடந்து சென்றுள்ளனர்.
இந்தச் சதித் திட்டத்தை முறியடித்த தனிப்படை போலீசார், தற்போது ஐந்து பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பணத்தையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியக் குற்றவாளியான இர்ஷாத் என்பவர், கடந்த ஒரு மாதமாகவே பழைய இரும்பு வியாபாரி போல வேடமிட்டு அந்த நகைக்கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மழை மற்றும் மோசமான வானிலையைப் பயன்படுத்தி இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். திருடப்பட்ட நகைகளை மற்ற மாநிலங்களில் விற்க முயன்றபோது, ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களைப் பிடித்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து சுமார் 45,000 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு கும்பலுக்கு வேறு மாநிலக் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
