கமலா கங்கா நகரிடை விரைவு ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர், ரயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டியிலுள்ள இருக்கைகளை பிளேடால் கிழித்து சேதப்படுத்திய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பெட்டியில் உள்ள ஏறத்தாழ அனைத்து இருக்கைகளும் திட்டமிட்டு பிளேடால் கிழிக்கப்பட்டு, உட்புற பஞ்சு மற்றும் இரும்புச் சட்டங்கள் வெளியே தெரியும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு வசதிகளைச் சீர்குலைக்கும் நோக்கில் இத்தகைய நாசவேலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும் என்றும், சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதன் மூலமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும் என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.