காதில் சேரும் அழுக்கை வெறும் கழிவாகக் கருதாமல், அதைக் கொண்டு புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் ‘செருமெனோகிராம்’ எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பிரேசிலின் கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நெல்சன் அந்தோனியோசி தலைமையிலான குழுவினர், காது அழுக்கின் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்வதன் மூலம் உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என நிரூபித்துள்ளனர்.
ரத்தப் பரிசோதனை போல ஊசி குத்தும் வலி இல்லாத, செலவு குறைந்த இந்த ஆய்வுக்கு 2025-ஆம் ஆண்டின் சிறந்த மருத்துவ விருது கிடைத்துள்ளதோடு, சுமார் 751 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5 பேருக்குப் புற்றுநோய் இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து இந்த ஆய்வு வியக்க வைத்துள்ளது. விரைவில் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களையும் இதன் மூலம் கண்டறியத் திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், காது அழுக்கை அகற்ற இயர்பட்ஸ் அல்லது குச்சிகளைப் பயன்படுத்துவது செவிப்பறையைப் பாதித்து காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
