தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய்யைப் பார்த்து திமுகதான் பயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், பின்னர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
“தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையைப் பார்த்து பாஜக பயப்படவில்லை; மாறாக திமுகதான் பெரும் அச்சத்தில் உள்ளது. திமுகவின் பயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் விஜய்யின் அரசியல் எழுச்சி, மற்றொருபுறம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அசுர வளர்ச்சி ஆகியவை திமுகவைத் திணறடித்து வருகின்றன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார், “இந்தத் தோல்வி பயத்தின் காரணமாகவே, மக்களைத் திசைதிருப்ப திமுக அரசு அடுத்தடுத்து இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, கலாசாரம் சீரழிந்து வருகிறது,” எனக் குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் த.வெ.க தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
