பாங்காக் நகரில் இருந்து பெங்களூருவுக்குத் தனது குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்த ஸ்ரீ நாயக் என்பவருக்கு, நடுவானில் எதிர்பாராத கசப்பான அனுபவம் ஏற்பட்டது.

விமானம் கிளம்பிய 15 நிமிடங்களில், அவருக்கு மேல் இருந்த உடைமைகளை வைக்கும் பெட்டியை விமான ஊழியர் திறந்தபோது, அதிலிருந்து சூடான அசைவ கறிப் பொட்டலம் ஒன்று அவர் மீது விழுந்தது.

இதில் அவரது ஆடைகள் நனைந்ததோடு, அவருக்குத் தோல் எரிச்சலும் ஏற்பட்டது. சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவர், அந்த வாசனையாலும் அசெளகரியத்தாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும், சக பயணிகள் பார்த்து சிரித்ததால் அவர் தர்மசங்கடத்திற்கு உள்ளானதோடு, தனது உடமைகளும் சேதமடைந்ததாகக் குற்றம் சாட்டினார்.

விமான நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு ₹5,000 மதிப்பிலான பயண வவுச்சரை இழப்பீடாக வழங்கியது. ஆனால், இது போதுமானதல்ல எனக் கருதிய அவர், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி ₹5 லட்சம் இழப்பீடு கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமானம் கிளம்பிய பிறகு பாதுகாப்பு இல்லாமல் பெட்டியைத் திறந்தது சேவை குறைபாடு என்று தீர்ப்பளித்தது.

எனினும், பெரிய அளவிலான பாதிப்புகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், மன உளைச்சலுக்காக ₹20,000 மற்றும் சட்டச் செலவுகளுக்காக ₹5,000 என மொத்தம் ₹25,000 வழங்கும்படி விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.