கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஓடும் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய மூன்று வயது சிறுமி எவ்வித காயமுமின்றி அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடியத்தூர் பகுதியில் திங்கள்கிழமை மதிய வேளையில் இந்த இதயத்தை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமி ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவருடன் ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்தச் சிறுமி திடீரென சாலையின் குறுக்கே ஓடியுள்ளார்.

அதே சமயம், அந்த சாலையில் தனியார் பேருந்து ஒன்று சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தச் சிறுமி பேருந்தின் முன்பகுதிக்கு நேராகச் சென்றார்.

சாலையின் குறுக்கே சிறுமி ஓடி வருவதைக் கண்ட பேருந்து ஓட்டுநர், சமயோசிதமாகச் செயல்பட்டு உடனடியாக பிரேக்கை அழுத்தியுள்ளார். பேருந்து சிறுமியின் மிக அருகாமையில் வந்து நின்றது. அந்த சிறுமி இதனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்களும், சிறுமியுடன் வந்த உறவினரும் அலறியடித்துக்கொண்டு ஓடிச் சென்று,  சிறுமியை மீட்டனர். அதிர்ஷ்டவசமாகச் சிறுமிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், அச்சம்பவத்தால் அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.

 

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநரின் விழிப்புணர்வும், துரிதமான செயல்பாடும் ஒரு பெரும் சோகத்தைத் தடுத்து நிறுத்தியதாகப் போக்குவரத்துப் போலீஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதே சமயம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.