மத்திய பட்ஜெட் குறித்த தொலைக்காட்சி விவாதத்தின் போது, இந்தி மொழிப் பயன்பாடு தொடர்பாக திமுக மற்றும் பாஜக பிரதிநிதிகளிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், இறுதியில் கேலியும் கிண்டலுமாக முடிந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர் பிரனேஷ் ராய் ஒருங்கிணைத்த விவாதத்தில், திமுக சார்பில் சரவணன் அண்ணாதுரை, பாஜக சார்பில் ஷெஹ்சாத் பூனவல்லா மற்றும் அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவாதத்தின் போது சக பங்கேற்பாளர் ஒருவர் இந்தியில் பேசத் தொடங்கியதால் அதிருப்தியடைந்த சரவணன் அண்ணாதுரை, “ஆங்கில விவாதத்திற்கு அழைத்துவிட்டு இந்தியில் பேசுவது முறையல்ல. எனக்கு புரியாத மொழியில் பேசுவது முரட்டுத்தனமானது” என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இதற்குப் பதிலளித்த ஷெஹ்சாத் பூனவல்லா, திடீரென திமுகவின் முக்கிய அடையாளமான ‘பராசக்தி’ திரைப்படம் குறித்துக் கேள்வி எழுப்பினார். “பராசக்தி திரைப்படம் எதை அடிப்படையாகக் கொண்டது?” என அவர் கேட்க, அதற்குச் சரவணன், “அது இந்தித் திணிப்புக்கு எதிரான எங்களது மொழிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து கேள்விகளை அடுக்கிய பூனவல்லா, “அப்போது யார் ஆட்சியில் இருந்தது?” எனக் கேட்க, சரவணன் “காங்கிரஸ்” என்றார். உடனே, “தற்போது நீங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறீர்கள்?” என பூனவல்லா மடக்க, சரவணன் பொறுமையிழந்தார். இந்தச் சூழலில் சரவணனின் பதில்களைக் கண்டு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

ஷெஹ்சாத் பூனவல்லா உள்ளிட்டோர் தன்னைப் பார்த்துச் சிரித்ததால் ஆத்திரமடைந்த சரவணன் அண்ணாதுரை, ஷெஹ்சாத் சிரிப்பதைப் போலவே ‘மிமிக்ரி’ செய்து அவரைக் கேலி செய்தார். இது விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்களை இன்னும் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

இந்தக் காணொளி குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள தெஹ்சீன் பூனவல்லா, “நான் திகைத்துப் போனேன். ஷெஹ்சாத்தின் பிடியில் திமுக செய்தித் தொடர்பாளர் சிக்குவதைப் பார்ப்பது ஒரு MMA மல்யுத்தப் போட்டியைப் பார்ப்பது போல் இருந்தது. ஷெஹ்சாத் விரித்த வலையில் அவர் விழுந்த விதம் என்னை வாயடைக்கச் செய்தது” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ கிளிப் இணையதளங்களில் வைரலாகி, பயனர்களிடையே விதவிதமான எதிர்வினைகளைப் பெற்றுவருகிறது.