தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்க விழா நிகழ்வில் பேசிய விஜய், தமிழக அரசியல் களத்தை தவெக, திமுக மற்றும் “பாஜக தலைமையிலான கட்சிகள்” என மூன்று முனைகளாகப் பிரித்துப் பேசினார். இதில் அதிமுக-வை நேரடியாகக் குறிப்பிடாமல், அவர்கள் பாஜக-வின் நிழலில் இருப்பதாக மறைமுகமாகச் சாடினார். இதற்குத் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்துள்ள பதிலடிதான் இப்போதைய ஹாட் டாபிக்.
“விஜய்க்கு அரசியல் தெரியவில்லை; தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) அதிமுகதான் தலைமை தாங்குகிறது, எடப்பாடி பழனிசாமிதான் அதன் முதல்வர் வேட்பாளர். அப்படி இருக்கையில், கொள்கை எதிரி என்று சொல்லும் பாஜக-வை நேரடியாக விமர்சிக்க விஜய்க்கு ஏன் பயம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விஜய்யைத் திணறடித்துள்ளார்.
மேலும், விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது என்றும், அவர் யாரை திருப்திப்படுத்த இப்படிப் பேசுகிறார் என்றும் சீனிவாசன் கிண்டலடித்துள்ளார். அதிமுக ஒரு வலுவான பேரியக்கம் என்றும், அதை “மற்றுமொரு கட்சி” என்பது போலக் கருதுவது விஜய்யின் அறியாமை என்றும் அவர் சாடியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக-வை விட தவெக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டுள்ள இந்தப் புதிய மோதல், 2026 களம் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதத்தை இணையத்தில் சூடாக்கியுள்ளது.
