பாகிஸ்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க, நவீன இயந்திரங்களுக்குப் பதிலாக தீயணைப்பு வீரர்கள் வாளிகளில் தண்ணீரை ஊற்றி முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நவீன தீயணைப்பு வாகனங்கள் அல்லது அழுத்தப்பட்ட தண்ணீர்க் குழாய்களைப் (Hose) பயன்படுத்துவதற்குப் பதிலாக, வரிசையாக நின்று வாளிகள் மூலம் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றனர். இந்தத் காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தானின் பொதுப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.”பாகிஸ்தான் இன்னும் கற்காலத்திலேயே வாழ்கிறது” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

 

மற்றொருவர், “வீரர்கள் செயல்படும் வேகத்தைப் பார்த்தால் தீயை அணைப்பதில் அவர்களுக்கு உண்மையான ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ வேலை செய்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், ஊழியர்களைக் குறை கூறக் கூடாது என்றும், அவர்களுக்குப் போதிய நிதி மற்றும் உபகரணங்களை வழங்காத அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இந்த வீடியோ எந்த நகரில், எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லையா அல்லது அடிப்படை வசதிகளே இல்லையா என்பதும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

எது எப்படியாயினும், நவீன யுகத்தில் ஒரு நாட்டின் அவசரகால சேவை இவ்வளவு பின்தங்கிய நிலையில் இருப்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.