தனது முன்னாள் கணவர் ஆன்லர் கோம் குறித்து அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த தனது விளக்கத்தை உலக சாம்பியன் மேரி கோம் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், ஆறு முறை உலக சாம்பியனுமான மேரி கோம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

“எனது கருத்துக்கள் பல ஆண்டுகளாக என்னுள் அடக்கப்பட்ட வலி, மனச்சோர்வு மற்றும் துரோகத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை. எனது கடின உழைப்பால் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஏமாற்றப்பட்டதுடன், நான் வாங்கிய நிலத்தையும் இழந்துவிட்டேன். அந்த நிலம் தற்போது சில குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.”

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், “ஆன்லர் என்னை மணந்த பிறகு எனது சம்பாத்தியத்தையே முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்; அவர் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை” என்று மேரி கோம் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்களது திருமண வாழ்க்கை பல ஆண்டுகளாக நன்றாகவே இருந்தது. ஆனால் நம்பிக்கை உடைந்தபோது அனைத்தும் மாறிவிட்டன. ஏப்ரல் 2025-இல் விவாகரத்து பெற்ற பின்னரும் நான் கண்ணியமாகவே அமைதி காத்தேன். ஆனால், தற்போது சூழ்நிலை காரணமாகவே பேச வேண்டியதாயிற்று” என்றார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dr Mangte Mary Kom (@mcmary.kom)

தனது பேச்சு கால்பந்து வீரர்களுக்கு எதிரானது எனப் பரவி வரும் தகவலை மறுத்த அவர், “நான் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தாலும், கால்பந்தை இதயப்பூர்வமாக நேசிக்கிறேன். கடினமாக உழைப்பவர்கள் மட்டுமே சுனில் சேத்ரி போன்ற உயரத்தை எட்ட முடியும் என்றே நான் கூறினேன். எந்தவொரு விளையாட்டையோ அல்லது வீரர்களையோ இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல” எனத் தெரிவித்தார்.

தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்த மேரி கோம், “எனது அறிக்கை ஒட்டுமொத்த ஆண் சமூகத்திற்கு எதிரானது அல்ல. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எனது தனிப்பட்ட மோதல் குறித்துப் பேசியது சிலரது மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கமாக முடித்துள்ளார்.