வந்தே பாரத் ரயிலில் தனது கைக்குழந்தைக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் செருப்பை வைத்து, ரயில்வே கட்டண முறை குறித்து பெண் பயணி ஒருவர் கிண்டலாகப் பதிவிட்ட வீடியோ இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பயணி ஒருவர் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது தனது கைக்குழந்தைக்காக சுமார் 1,500 ரூபாய் செலுத்தி தனியாக ஒரு இருக்கையை அவர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், பயணம் முழுவதும் குழந்தை பெற்றோரின் மடியிலேயே உறங்கியதால், அந்த இருக்கை காலியாக இருந்துள்ளது.
காலியாக இருந்த அந்த இருக்கையில் தனது 100 ரூபாய் மதிப்பிலான செருப்பை வைத்து வீடியோ எடுத்த அந்தப் பெண், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், “நாங்கள் பெரும் தொகை கொடுத்து வாங்கிய இருக்கையில் என் குழந்தை அமரவில்லை, மாறாக 100 ரூபாய் செருப்புதான் சொகுசாகப் பயணம் செய்கிறது” என ரயில்வே கட்டணத்தை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இரு தரப்பாகப் பிரிந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
“हम वंदे भारत में है। हमने तीन सीट बुक किए थे। एक मेरे हसबेंड का। एक मेरे बच्चे का और एक मेरा। मेरे बच्चे की सीट पर बच्चा नहीं बैठा, मेरे बच्चे की चप्पल जा रही है। 7 से 8 घंटे का सफर है और मेरा बच्चा औकात में है…चप्पल 100 रुपए की है।” pic.twitter.com/k2GtaBg1qT
— Arvind Sharma (@sarviind) February 1, 2026
“இந்தக் காலத்து ரயில்களில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்பதற்கு இது ஒரு நகைச்சுவையான உதாரணம்” என சிலர் பதிவிட்டுள்ளனர். “ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை முன்பதிவு செய்வது என்பது பெற்றோரின் தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு இருக்கையில் செருப்பை வைத்துவிட்டு, ரயில்வே துறையைக் குறை கூறுவது தேவையற்றது. இது வெறும் விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட செயல்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முறையான இருக்கையில் செருப்பை வைத்தது நாகரிகமற்ற செயல் என்றும், பணத்தைச் செலவழித்துவிட்டுத் துறையைக் குறை கூறுவது முறையல்ல என்றும் கருத்துகள் வலுத்து வருகின்றன.
