கர்நாடக மாநிலம் ஹாசனில், கூடுதல் வரதட்சணை கொடுமை மற்றும் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் துன்புறுத்தியதால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்திரா (24) என்ற பெண்ணுக்கும், சாமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 60 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, பேக்கரி நடத்தி வந்த சாமி, அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மீண்டும் தொழில் தொடங்க பணம் தேவைப்பட்டதால், இந்திராவின் மாமியார் சங்கரம்மா மற்றும் நாத்தனார் புட்டி ஆகியோருடன் சேர்ந்து சாமி கூடுதல் வரதட்சணை கேட்டு இந்திராவை சித்ரவதை செய்ததாகத் தெரிகிறது.

மேலும், இந்திராவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சாமி அவரைத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த இந்திரா, அவ்வப்போது தனது தாய் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இந்திரா விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திராவின் பெற்றோர், தனது மகளின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையே காரணம் எனக் கூறி போலீசில் புகார் அளித்தனர். கணவர் சாமி, மாமியார் சங்கரம்மா மற்றும் நாத்தனார் புட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்