உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.

கடந்த 26-ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில், நேற்று மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய சிறிய தேர்கள் இழுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி – வள்ளி, தெய்வானைக்குச் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!” என விண்ணதிர முழக்கமிட்டு தேரை இழுத்துச் சென்றனர்‌

இந்தத் திருவிழாவையொட்டி, தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பழனிக்கு வருகை தந்தார். அவர் திருஆவினன்குடி கோவிலில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டார். பின்னர், படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.