அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2013-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல் குறிப்புகளில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்குப் பால்வினை நோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாதிப்பைத் தனது அப்போதைய மனைவி மெலிண்டாவிடம் இருந்து மறைக்க, பில் கேட்ஸ் ரகசியமாக ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கேட்டதாக எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பில் கேட்ஸ் தரப்பு இதற்கு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் “அபத்தமானவை மற்றும் பொய்யானவை” என்று கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். பில் கேட்ஸ் உடனான உறவை அவர் துண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியிலேயே, எப்ஸ்டீன் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப முயன்றதாக அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் ஒரு குற்றவாளி என்பதால், இந்த மின்னஞ்சல்களில் உள்ள தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.