தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும், அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அவரது முன்னாள் மேலாளரும், தி.மு.க பிரமுகருமான தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசினார். அவர் பேசியதாவது,
விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. விஜய்யின் வளர்ச்சிக்கு முழுமுதற்காரணமான தந்தையை, இன்று விஜய் எந்த இடத்திலும் மதிக்காமல் விட்டுக்கொடுத்துவிட்டார். சந்திரசேகர் உறவை முறிக்க விரும்பவில்லை என்றாலும், விஜய் அவரைப் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது.
“ஜனநாயகன்” திரைப்படத்தின் சென்சார் சிக்கலுக்கும் மாநில அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.
சென்சார் குழுவின் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்தது; அதைச் சரி செய்ய வேண்டியது படக்குழுவின் கடமை.
தி.மு.க-வோ அல்லது பா.ஜ.க-வோ படத்தைத் தடுக்கவில்லை. உங்கள் தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழி போடுவது தவறு.
விஜய் அருகில் இருப்பவர்கள் குறித்து பி.டி. செல்வகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது சிறைக்குச் சென்றவர்கள் மற்றும் பணபலம் கொண்ட ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை அருகில் வைத்திருப்பது கட்சிக்கு அழகல்ல. தெளிவான சிந்தனையாளர்களை அவர் அருகில் வைத்திருக்க வேண்டும்.
கரூர் மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் முழு பொறுப்பு. ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் விஜய்யை கைது செய்திருப்பார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு நேரில் சென்ற விஜய், தன் மாநாட்டில் இறந்தவர்களின் வீட்டிற்குச் செல்லவில்லை. அவருக்கு விளம்பரம் தேடும் இடத்தில்தான் அக்கறை உள்ளது.
“நடிகர்கள் பின்னால் செல்பவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். சினிமாவில் பேசும் பஞ்ச் வசனங்கள் அரசியலில் எடுபடாது. 2026 தேர்தலில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று பி.டி. செல்வகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.
