நாடு முழுவதும் சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா உள்ளிட்ட ‘பாவப் பொருட்களுக்கான’ திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி உயர்வு இன்று (பிப்ரவரி 1, 2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் இப்பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது.

கடந்த 2017-ல் ஜி.எஸ்.டி. அறிமுகமானபோது இப்பொருட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. 2025 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தத்தின்படி, இது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இன்று முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது. இனி சில்லறை விற்பனை விலையின் (MRP) அடிப்படையில் வரி கணக்கிடப்படும்.

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், உற்பத்தியைக் கண்காணிக்கவும் மத்திய அரசு புதிய விதிகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி புகையிலை உற்பத்தி ஆலைகளில் உள்ள அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த வீடியோ பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் (2 ஆண்டுகள்) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பான் மசாலா உற்பத்தியாளர்கள் ‘சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ்’ சட்டத்தின் கீழ் இன்று முதல் புதிய பதிவுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

40 சதவீத ஜி.எஸ்.டி. தவிர, சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து கூடுதல் கலால் வரி விதிக்கப்படுகிறது. அதாவது 65 மி.மீ சிகரெட்: ஒன்றுக்கு ரூ. 2.10 வரை. 70 மி.மீ சிகரெட்: ஒன்றுக்கு ரூ. 4.00. 75 மி.மீ சிகரெட்: ஒன்றுக்கு ரூ. 5.40 போன்றவைகள் ஆகும்.

மேலும், மென்று தின்னும் புகையிலைக்கு 82%, குட்காவிற்கு 91%, மற்றும் பான் மசாலாவுக்கு 88% என்ற அளவில் கூடுதல் கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் வரி உயர்வு காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை சுமார் 68 சதவீதம் வரை குறையக்கூடும் என ‘கிரிசில் ரேட்டிங்ஸ்’ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரசின் வருவாயையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.