உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு அசைவ உணவைச் சாப்பிட்ட இளைஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையப் பகுதியில் உள்ள பொதுச் சேவை மையம் ஒன்றில் நான்கு நண்பர்கள் இரவு நேரத்தில் மது விருந்து நடத்தியுள்ளனர். விருந்து முடிந்து சிறிது நேரத்திலேயே நான்கு பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் மயக்கம் உண்டானது.
இதில் நௌஷாத் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த காம்ரான், அப்சர் மற்றும் சந்திரபிரகாஷ் ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அந்த இடத்தைச் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் சாப்பிட்ட கோழி இறைச்சியில் ஏதோ விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த இறைச்சியைச் சாப்பிட்ட உடனேயே தங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அருந்திய மதுவில் நச்சுத்தன்மை இருந்ததா அல்லது உணவில் யாராவது விஷம் கலந்தார்களா என்பது குறித்து மதுபான பாட்டில்கள் மற்றும் உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். தடய அறிவியல் அறிக்கை வந்த பின்னரே இளைஞரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
