தேசியத் தலைநகர் டெல்லியில் 11 வயது மகனைப் பெற்ற தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ரோகினி பகுதியில் வசித்து வந்த தினேஷ் என்பவர், தனது மகன் லக்ஷயாவை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது மனைவிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ், மகனைக் கொன்றுவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாகவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது சொந்த மகனையே தந்தை கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமறைவாக உள்ள தினேஷைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.