மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையைத் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த நடிகர் விஜய் அ.தி.மு.க.வை விமர்சித்ததாலேயே தாங்களும் அவரை விமர்சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்த செல்லூர் ராஜூ, விஜய்யை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும் எம்.ஜி.ஆர் மக்களுடன் மக்களாக நின்று அரசியலில் ஈடுபட்டார் என்றும், ஆனால் விஜய் அறைக்குள் இருந்தபடி அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார். குறிப்பாக, கரூரில் 41 உயிர்கள் பலியான போது கூட விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறிய அவர், இதற்கு எதிராக மக்கள் சுனாமி போலத் திரண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலை வீசி வருவதால், வரும் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் அ.தி.மு.க.வில் இணைய விரும்பும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ‘நாடகம்’ என்று விமர்சித்த செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.வின் கொள்கைகளை அறிந்தவர் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.