ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கவிதா தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது முறையாகக் கவிதா கர்ப்பமடைந்த போது, தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆவலில் அந்தத் தம்பதியினர் இருந்துள்ளனர்.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதாவுக்கு எதிர்பாராத விதமாக ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த 3 குழந்தைகளில் 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்கும். தற்போது தாயும் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மீண்டும் 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் 7 குழந்தைகளுக்குப் பெற்றோராக இந்தத் தம்பதியினர் மாறியுள்ளனர். தங்களது நீண்ட நாள் ஆசையான ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தம்பதியினரும் அவர்களது உறவினர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
