அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதால், அந்நாட்டு டாலரின் மதிப்பு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதன் விளைவாக, டாலரை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கும் பல நாடுகள், தங்களது பாதுகாப்பைக் கருதி டாலருக்குப் பதில் தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளன. இதுவே விலை உயர்வுக்கான முதல் மற்றும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இரண்டாவதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர் வெடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கின்றனர்.
இந்த இரண்டு காரணங்களும் ஒரே நேரத்தில் அமைந்ததே தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயர வழிவகுத்துள்ளது என தமிழ்நாடு தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் விளக்கியுள்ளார்.
தற்போதைய சூழலில் தங்கம் மட்டுமின்றி வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இந்த உயர்வு இன்னும் எந்த எல்லை வரை செல்லும் என்று கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் தணியாத வரை, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
